ஆஞ்சநேயருக்கு என்று தனி கோயில்கள் மதுரையில் பல உண்டு. அப்படி மதுரையில் சிம்மக்கல் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வருவோமா? இரயில் நிலையத்திலிருந்தும், பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். இச்சிறிய அழகான கோயிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு “ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்” என்பது திருநாமம்.
கோயிலின் தல வரலாறு பார்ப்போமா? மதுரையில் உள்ள சிம்மக்கல்-இல் குழந்தை ஆனந்த சுவாமி என்னும் யோகி வாழ்ந்து வந்தார். இவரை பல உள்ளூர்வாசிகளுக்கு தெரியும். அவரை மீனாக்ஷி அம்மனின் குழந்தையாகவே கண்டு மகிழ்ந்தனர். அதனால் இவர் பெயர் குழந்தை சுவாமி என்று பிரபலம். இவர் கிருதமாலா நதி கரையில் வசித்து வந்தார். கிருதமாலா என்னும் நதியும் வைகையும் மதுரையில் ஓடும் நதிகள். வைகையில் நீராடிய பின் தனது நிஷ்டையில் அமர்ந்து விடுவார் குழந்தை சுவாமி. ஊர் மக்கள் குழந்தைக்கு அன்னமளிப்பார்கள். இஷ்டமானது மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை வேண்டாம் என்று எடுத்துச் செல்ல சொல்வார் குழந்தை சுவாமி.
ஒரு பொன்னான நாளில் பல ஊர் மக்கள் கனவில் ஸ்ரீஆஞ்சநேயர் தோன்றினார். பெதான்னுடைய விக்ரஹம் ஒன்று கிருதமாலா நதியில் இருப்பதாகவும், எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். காலை எல்லோரும் ஒன்று கூடி ஸ்ரீ ஆஞ்சநேயர் விக்ரஹத்தை எப்படி கண்டுபிடிப்பது என்பது தெரியாமல், குழந்தை சுவாமியை அணுகினார்கள். அவரின் தியானம் முடியும் வரை காத்திருந்தனர். தியானத்தை முடித்த குழந்தை சுவாமி ஊர் மக்களை பார்த்து “நீங்கள் எல்லாம் புண்ணியசாலிகள் ஸ்ரீஆஞ்சநேயரின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள்” என்றார். பின் அனுமார் எங்கிருக்கிறார் என்று தெரிந்துவிட்டதா? என்று வினவினார். அதாவது அவர்கள் கனவில் ஆஞ்சநேயரை பார்த்ததையும், பின் அனுமார் விக்ரஹத்தை கண்டுபிடித்து விட்டார்களா என்பதும் தான் இந்த விசாரணை. “மதுரையில் ஓடும் கிருதமாலா நதியில் எங்கு என்று தேடுவது? நாங்கள் இப்பொழுது இங்கு வந்திருப்பதே இதற்கு தங்களின் வழிகாட்டல் பெறவே” என்றனர். சிறிது யோசித்த குழந்தை சுவாமி அவர்கள் எழுந்திருந்தார் “வாருங்கள் செல்வோம்” என்று கிருதமாலா நதியை நோக்கி புறப்பட்டார்.
கிருதமாலா நதியில் ஓர் குறிப்பிட்ட கரையில் குழந்தை சுவாமி அவர்களின் மேற்பார்வையில் தேடல் தொடங்கியது. நீண்ட நேரத்தின் பிறகு ஸ்ரீ நரஸிம்ம மூர்த்தியின் விக்ரஹம் கிடைத்தது, பின் ஆஞ்சநேயர் விக்ரஹம் கிடைத்தது, பின் மஹாலக்ஷ்மியின் விக்ரகம், பின் கருடாழ்வாரின் விக்ரகம், கடைசியாக விநாயக மூர்த்தியின் இரண்டு மூர்த்திகள் கிடைத்தது.
குழந்தை சுவாமி அவர்களுக்கு ஶ்ரீஆஞ்சநேயர் இட்ட கட்டளையை அனுசரித்து இந்த தெய்வ விக்ரஹங்கள் அனைத்தையும் சற்று தொலைவில் கரையோரம் இருந்த இலுப்பை மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்வதென்பது தீர்மானம் செய்தார். நதி கரையோரம் இருந்த அந்த இலுப்பை மரம் மிகப்பழமையானதாக காய்ந்து போய் ஜீவன்துறக்கும் நிலையில் இருந்தது. ஆனால் நன்னாள் குறிப்பிட்டு, குழந்தை சுவாமி அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை இலுப்பன் மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அருகிலேயே மற்ற தெய்வ விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின் அங்கு நடந்த அதிசயத்தை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கு இருந்த இலுப்பை மரம் புதிய துளிர் விட ஆரம்பித்தது, தழைத்து புதிய பொலிவுடன் திகழ ஆரம்பித்தது.
தற்போதைய கோயிலுக்குள் நுழைந்த உடன் பெரிய கூடம் உள்ளது. அக்கூடத்தின் கடைசி பகுதி கர்ப்பகிரகமாக உள்ளது. கர்ப்பகிரகம் தடுப்பு சுவரின் மேல் ஸ்ரீராம தர்பார் புடைப்பு சித்திரமாக உள்ளது. கர்ப்பகிரகத்தின் வலதுபுறம் இலுப்பை மரத்தின் ஒரு பாகம் தெரிகிறது. கர்ப்பகிரகத்தின் நடுவில் ஸ்ரீஆஞ்சநேயர் தரிசனம் தருகிறார். அவரது இடது புறம் ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ கருடாழ்வார் ஆகியோர் தரிசனம் தருகின்றன. இரண்டு விநாயக மூர்த்திகளும் சுவரை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் மூன்று அடி உயரமுள்ள உத்ஸவ மூர்த்தி மூலவரின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகத்தின் மேல் ஏகதள விமானம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
கர்ப்பக்கிரகத்தை வலம் வரும் போது, ஸ்ரீவிஷ்ணு துர்க்கையும், ஸ்ரீசுதர்ஸனாழ்வாரும் தனித்தனி சன்னிதியில் தரிசனம் தருகிறார்கள். சற்றே நகர்ந்தால் தல விருக்ஷத்தின் நடுவில் தானாக, இயற்கையாக இருக்கும் உருவத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் நமக்கு தரிசனம் தருகிறார்.
மூலவர் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் சிலாரூபம் இரண்டரை அடி உயரம் இருக்கும். பகவானின் இடது திருக்கரம் சற்றே ஓங்கிய நிலையில் சஞ்சீவி பர்வதத்தை தூக்கி பிடித்திருக்கிறது. அவரது இடுப்பில் ஊன்றிய வலது திருக்கரம் கதையை பிடித்திருக்கிறது. அவரது வாலில் சிறிய மலையை கட்டி பிடித்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவரது வாலின் நுனியில் சிறிய மணி இருப்பது தெரிகிறது. அவரது திருப்பாதங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளது, அவைகள் ஸ்ரீராமனின் பக்தர்களுக்கு உதவ குதித்தெழு தயார் நிலையில் உள்ளது போல் இருக்கிறது. கருணை மிகு கண்கள் தனது கடாக்ஷத்தினால் பக்தர்களை அவரிடம் ஐய்கிய படுத்துகிறது. அபிஷேகம் செய்யும் போது பகவான் வயது முதிர்ந்தவராக [விருத்தர்] காணப்படுவார் என்கிறார்கள்.
சைவ-வைஷ்ணவ ஒற்றுமையை இந்த கோவில் வெகு அழகாக பிரதிபலிக்கிறது. ஸ்ரீ குழந்தை சுவாமிகள் சிவ ஆகம விதிகளின்படி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார் என்பதால் இங்கு குங்குமத்துடன் விபூதியும் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்மர் முதலில் கிருதமாலா நதியிலிருந்து முதலில் தோன்றினார் என்பதால் ஆடி மாதம் வரும் ஸ்வாதி நட்சத்திரத்தில் இக்கோயிலின் பிரம்மோஸ்சவம் ஆரம்பிக்கிறது. இந்த பதினைந்து நாள் பெருந்திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தினமும் பகவானுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார்கள். அதுவும் “விருத்த அலங்காரம்” அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இத்திருக்கோயிலின் விசேஷம் ஆதி பிரபுவான ஸ்ரீ கணபதியும் அந்த பிரபுவான ஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஒருங்கிணைக்க ஒரே கர்ப்பகிரகத்தில் தரிசிக்கலாம். மற்றொரு விசேஷம், பெரிய திருவடியாகிய ஸ்ரீ கருடாழ்வாரையும், திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயரையும் ஒரே கர்ப்பகிரகத்தில் தரிசிக்கலாம்.
-ஜெயந்தி வேணுகோபால்
சென்னை