Paramparaa – The Tradition Continues….

பிரசித்தி பெற்ற ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் மகத்துவம்

அருள்மிகு ஆதிகேசவப் பெருமால் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோவில் தலவரலாற்றுஸ் ருக்கமும் பிற தகவல்களும் பின்வருமாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் ஸ்ரீபெரும்பூதூர் நகர் மற்றும் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ள்ளது. அதாவது சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  “புராண” என்றால் பழமையான என்பது பொருளாகும். இத்திருத்தலத்தின் தலவரலாறு “பூதபுரி மஹாத்மியம்” என்ற புராண வரலாற்று நூலில் சொல்லப்படுகிறது. அந்த வரலாறு குறித்து ஸ்காந்த புராணம் என்னும் புராணத்தில் கந்தப் பெருமான் அகஸ்தியருக்குஸ் ன்னதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி பழங்காலத்தில் சிறந்த ஆட்சி புரிந்தவன் மாந்தாதா என்பவனாவன். அவன் மகன் அம்பரீஷனின் மகன் யுவனாசவன் என்பவனாவன். அவனுக்கு நெடு நாட்கள் சந்தான பாக்கியமில்லாமல், பிறகு புத்ரகாமேஷ்டி யாகம் செய்த பிற்பாடு, அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு “ஹாரிதன்” எனப் பெயரிட்டு கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வளர்க்கப்பட்டான். உரிய பருவத்தில் காசி ராஜனின் மகளை மணந்து நாட்டை நன்முறையில் ஆண்டு வந்தான்.

ஹாரிதன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் சென்றான்.  அங்கு ஒரு புலி ஒரு பசுவை கொல்லுவதற்காக அதன் மேல் பாய்ந்து பிடறியைக் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது அவன் பசுவின் மேல் இரக்கப்பட்டு அப்புலியைக் கொல்ல அம்பு ஒன்றை குறி பார்த்து எய்தான். அம்புபட்ட புலி பசுவைக் கடித்துக் கொன்றவாறே தானும் உயிரை விட்டது, தன்னால் பசு இறந்ததால் அவனுக்கு “கோஹத்தி தோஷம்” ஏற்பட்டதாகக் கருதி மிக வருந்தினான். அப்போது ஒர் அசரிரீ, “மன்னா வருந்த வேண்டாம், சத்தியவிரத ஷேத்திரத்தை அடுத்த அருணாரண்யத்தில் அனந்தஸ்ரசின் கரையில் பூதபுரி ஷேத்திரம் உள்ளது. அங்கு சென்று அனந்தஸரசில் நீராடி இறைவனை வணங்கினால் உன் பாவம் தீர்ந்து நன்மை ஏற்படும்” என்றது. பிறகு ஹாரிதன் தன் தலைநகர் வந்தடைந்தான். அவனது குருவான வசிஷ்டரை வணங்கி நடந்ததைக் கூறி பூதபுரி ஷேத்திரம் எங்குள்ளது எனக் கேட்டான். உடனே வசிஷ்டர் பூதபுரி இருக்குமிடத்தைத் தெரிவித்து தவம் செய்வதற்கும், தவத்திற்குரிய மந்திரத்தையும் உபதேசித்து அனுப்பினார். ஹாரிதன் பூதபுரி என்றழைக்கப்பட்ட அந்நகருக்கு பெயர் ஏற்படக் காரணம் என்ன என்று கேட்க, ஆச்சாரியர் வசிஷ்டர் கீழ்கண்ட வரலாற்று விவரங்களைக் கூறினார்.

ருத்ரன் கைலாயத்தில் நடனம் புரியும் போது அவரது ஆடைகள் கலைந்தது, ஜடைகள் விரிந்தது, தவிர, மெய் மறந்த நிலையில் ருத்ரதாண்டவம் செய்து கொண்டிருந்தார். அதைக் கண்ட ருத்ரனது ஏவலர்களான பூதகணங்கள் வியந்து சிரிக்க, கோபம் கொண்ட ருத்ரன் அவர்ககளைக் கைலாயத்தை விட்டு அகல சாபம் கொடுத்தார். சாபத்தால் கலங்கிய பூதகணங்கள் பிரம்மனிடன் சென்று முறையிட்டன. பிரம்மா அவர்களுக்கு குற்றம் தீர்வதற்கு ஏற்ற வழி வகை கூறினார். திருவேங்கடமலைக்குத் தெற்கே சத்தியவிரத ஷேத்திரமுள்ளது. அதன் வடகிழக்கே அருணாரண்யம் உள்ளது. அங்கு சென்று ஸ்ரீமந்நாராயணனை நோக்கி  கடுந்தவம் புரிந்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என அருளினார். அதன்படி பூதகணங்கள் அருணாரண்யம் சென்று பெருமாளை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர். ஸ்ரீ நாராயணன், ஆதிகேசவப் பெருமாளாக பூதகணங்களுக்குக் காட்சி தந்து, ஸ்ரீ ஆதிசேஷனால் ஏற்படுத்தப்பட்ட அனந்தசரஸ் தடாகத்தில் மூழ்கச் செய்து, குற்றம் தீர்த்து ருத்திரனை அடையச் செய்தார். பிறகு பூதகணங்கள் ருத்ரன் அனுமதி பெற்று பெருமாள் காட்சி தந்து அருள் செய்த அங்கேயே ஸாந்நித்யம் செய்ய வேண்டி புதியதாக ஒரு நகரை நிர்மாணித்தன. பூதங்களால் இந்நகர் நிர்மாணிக்கப்பட்டதால் பூதபுரி என்ற பெயர் பெற்றது என வசிஷ்டர் கூறினார். பிற்காலத்தில் அந்த அருணாரண்யமே மருவி ஸ்ரீபெரும்பூதூர் என வழங்கப்பட்டு வரும் புராதனத்  திருத்தலமாகும்.

சதுர்யுகங்களில் கலியுகத்தில் தமிழகத்தில், சென்னை திருவல்லிக்கேணி,  திருநீர்மலை, திருவிடவெந்தை, திருக்கடல்மல்லை, திரிப்புட்குழி,  திருஎவ்வுள்ளூர், தெருவேங்கடம், திருநின்றவூர், சத்தியவிரதஷேத்திரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் ஆகிய திவ்யதேசங்கள் மட்டும் இல்லாமல், முதலாழ்வார் மூவர், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், முதலியாண்டான் ஆகிய அவதார புருஷர்கள் அவதரித்த தொண்டை மண்டலத்தின் நடுவே, அளவாலும், தரத்தாலும் உயர்ந்த ஒரு பெரும் ஊர் புதியதாக உருவாகி இருந்தது. அங்கு உலகம் உருவான உடனேயே அதனை நிர்வகிக்க ஆதியிலேயே “கேசவன்” என்னும் திருப்பெயருடன் திருமால் எழுந்தருளியிருந்த இடத்தில் புதிய ஊர் ஒன்று உருவானது. அதுவே ஸ்ரீபெரும்பூதூர் என அழைக்கப்படுகிறது. காக்கும் கடவுளான திருமால் உரையும் தலமானதால் “ஸ்ரீ”  “திரு என்னும் அடைமொழிகள் சேர்ந்து ஸ்ரீபெரும்பூதூர், திருப்பெரும்பூதூர் என வழங்கப்பட்டது. ஹாரிதன் புலங்களை வென்று, இதயத்தில் ஸ்ரீமந்நாராயணனை தியானித்து ஆச்சாரியார் வசிஷ்டர் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு நூறு வருடங்கள் கடுந்தவம் புரிந்தான். ஸ்ரீமந்நாராயணன், ஹாரிதனுடைய தவத்துக்கும், தோத்திரத்திற்க்கும்  மகிழ்ந்து இத்தலத்தில் காட்சி தந்து கோஹத்திதோஷம் நீங்க அருள் புரிந்தார். பிறகு அழிந்த இந்நகரை பழையபடி நிர்மாணித்து திருக்கோயிலில் தவறாது உற்சவங்கள் மற்றும் பூஜைகள் நடத்தி வர ஏற்பாடுகள் செய்ய அருள் புரிந்தார்.   அதன்படியே இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

நாளடைவில் வளர்ந்து வந்த இத்தலம் ஸ்ரீவைணவம் என்னும் மார்க்கத்தில் ஒரு புண்ணியனைப் பெற்றெடுத்து சிறக்கக் போகும் புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் தலமானது.

                            …..தொடரும்….

                         கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour