Paramparaa – The Tradition Continues….

செல்வத்தை பெருக வைக்கும் குசேல சரித்திரம்

மார்கழி மாதம் முதல் புதன்கிழமையன்று குருவாயுரப்பனுக்கு அவல் படைத்து இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும் எனக் கூறப்படுகிறது. அதை பின்வருமாறு பார்ப்போம்:

குசேல நாமா பவது ஸதீர்யதாம் கத ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ த்வதேக ராகேண தநாதி நிஸ்பருஹோ திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ

சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா என்ற நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன் தலையாட்டி விடை அளித்தார். அந்த ஸ்லோகத்தை கீழ்கண்டவாறு பார்ப்போமா:-

ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம் ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்

ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல்  பக்தியின் பயனாக முக்தியடைந்தார். இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான  நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்  இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

மேற்கண்ட குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு.

இந்த ஸ்லோகங்களை உளமாற சொல்லி வந்தால் பொருள் வளர்ச்சி,  மன வளர்ச்சி எல்லாம் கூடும். ஆண்டவனே ஆம் என்று சொன்ன நாராயணீயத்தின் ஒப்பற்ற அற்புத சுலோகங்களை மனம் ஒன்றி படிக்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும். குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம் முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன், குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம்.  அன்று ஆலயத்தில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர்.

குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும்,  அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது .  பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர்.  இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து  அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது. துவாரகை சென்று, கிருஷ்ணனை தரிசித்து வர வேண்டும் என்று நினைத்தார் குசேலர். வெறுங்கையுடன் போகக் கூடாது என்று, பல வீடுகளில் அவல் யாசகம் எடுத்து, அதை, ஒரு கந்தல் துணியில் முடிந்து, துவாரகைக்குப் புறப்பட்டார்.

கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். திருமணமாகி அவருக்கு 27 குழந்தை கள் பிறந்ததால் சாப்பாட் டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார். ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனைவருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.  உடனே குசேலரிடம், அவரது மனைவி சுசீலா, “நம் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. நீங்கள் துவாரகாபுரி சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை பார்த்து வாருங்கள்” என்று கூறினாள். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்த களுக்காக ஒத்துக் கொண்டார். ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார்.

குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்று அவரை தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார். பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை கவனித்து விட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார் மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது.

பிறகு என்ன, ஸ்ரீகிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் எனக் கூறி வேண்டினார் குசேலர்.

                                                          கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour