ஆஞ்சநேயரை தினமும் வணங்குவது விசேஷம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. அவரை துதித்தால் ராமரை துதிப்பதற்கு சமம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை நினைத்து பிரார்த்தனை செய்தால் பக்தர்கள் தனது துன்பங்கள் நீங்கப்பெற்று வாழ்வில் வளங்கள் பெற்று மகிழ்ந்து வாழ்வார்கள் எனவும் பேசப்படுகிறது. ஆஞ்சநேயரின் அரிய சக்தியையும், ராமர் மேல் கொண்ட அபார பக்தி, மற்றும் அவரின் அசுர பலத்த்தையும், கீழ்கண்ட ஸ்லோகத்தில் அவரை மெச்சியதை பார்ப்போமா:-
மிகச் சிவந்த முகமுடைய வானரன்.
மேரு போன்ற எழிலுரு வாய்ந்தவன்.
பகை யழித்திடும் வாயுவின் புத்திரன்.
பாரிசாத மர நிழல் வாழ்பவன்.
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்கிறேன்.
அரக்கர் கூட்டம் அழித்து மகிழ்பவன்.
ஆளும் இராமனின் நாமம் கேட்டில் சிரத்தின் மீதி கூப்பிய கையுடன்.
திரண்ட கண்ணில் நீர்சோரத் துதிப்பவன்.
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்யுமின்.
சித்த வேகமும் வாயுவின் வேகமும் சேர்ந்தவன் தன் புலன்களை வென்றவன்.
புத்தி மிக்கவர் தம்முட் சிறந்தவன்.
ராமனின் தூதுவன்.
வாயுவின் சேயன் வானர சேனையின் முக்கியன்.
சென்னி தாழ்த்தியச் செம்மலைப் போற்றுவேன்.
யாரும் செய்வதற்கரியதை நீ செய்வாய்.
ஏதுனக்கரியது?
பாரில் என்செயல் நீநிறைவேற்றிவை.
பரிவின் ஆழிநீ இராம தூதனே.
ஆஞ்சநேயனே, அஞ்சலி செய்கிறேன்.
அறிவு மற்றும் உடல் வலி நற்புகழ் ஆளும் சொற்றிறம், அச்சமிலா மனம்.
வறிய புன்பிணி நீங்கிய மேநிலை வளரும் தைரியம் மேவிடும் நிச்சயம்.
ஆஞ்சநேயனை அஞ்சலி செய்திடின் அனுபவத்தினில் இவை பெறலாகுமே.
கே.வி. வேணுகோபால்