நம் பூர்வாசார்யர்கள் திருவுளப்படி நாம் ஸ்ரீவைஷ்ணவராவதற்கு ஒரு முறை/க்ரமம் உள்ளது. அதுவே “பஞ்ச ஸம்ஸ்காரம்” ஆகும், அதாவது நம் சம்ப்ரதாயத்துக்கு அறிமுகப்படுத்தப்படுவது. ஸம்ஸ்காரம் எனில் தூய்மைப்படுத்தும் முறை. தகுதி அற்ற நிலையிலிருந்து தகுதி உள்ள நிலைக்கு மாற்றப்படுவது. இம்முறையில்தான் ஒருவர் முதலில் ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார். ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்தவன் ப்ரஹ்மோபதேசம் பெற்றுப் ப்ராஹ்மண நிலை எய்துவதுபோல்தான் இது. ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறந்தவன் இந்த முறையில் எளிதில் ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஆனால் இதில் ஒரு வியத்தகு செய்தி என்னவென்றால் ஸ்ரீவைஷ்ணவன் ஆவதற்கு ஒருவன் ஸ்ரீவைஷ்ணவக்குலத்தில் பிறந்திருக்கவேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில் ஸ்ரீவைஷ்ணவத்வம் ஆத்ம ஸம்பந்தமானது, ப்ராஹ்மண்யம் சரீர ஸம்பந்தமான ஸம்ஸ்காரம். மோக்ஷ மார்க்கம் புகுந்து பிற தேவதாந்தர உபாஸனம் முதலியன விட்டு எம்பெருமானையே சரண் அடைய வழி செய்யும் பஞ்ச ஸம்ஸ்காரம் மொழி, ஜாதி, இனம், நாடு அனைத்தும் கடந்ததாகும். பஞ்ச ஸம்ஸ்காரம் அல்லது ஸமாச்ரயணம் என்பது சாஸ்த்ரத்தில் ஒருவரை ஸ்ரீவைஷ்ணவர் ஆக நெறிப்படுத்தும் முறையாக விளக்கப்பட்டுள்ளது.