திட்டை ஆஞ்சநேயா் கோவில் திட்டை தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா. உள்ளே நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.
மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு, நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது… இது முற்றிலும் உண்மையான விஷயம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் விளங்குவதால் , வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.
அனுமனை தரிசிக்க வெண்ணெய் வாங்க முடியவில்லை, வெற்றிலை வாங்க முடியவில்லை, வடைமாலை அணிவிக்க முடியவில்லை என்ற வருத்தமெல்லாம் வேண்டாம். பணமிருந்தால் இதை செய்யலாம். முடியாத பட்சத்தில், அவருக்குப் பிடித்தமான “ஸ்ரீராம ஜெயம்’ சொல்லி வணங்கினாலே போதும். அவரது அருள் கிடைக்கும். எதையும் எதிர்பாராத இதயதெய்வம் அவர்.
ராமநாமத்தை தவிர வேறு எதுவும் அறியாத அவர் தன்னலமில்லாத வீரனாக திகழ்ந்தார். சீதையை மீட்டு வருவதற்காக அவர் ராமனிடம் எந்தவித பிரதிபலனையும் கருதவில்லை. ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழ்ந்தார். எல்லா தெய்வீக குணங்களும் அவரிடம் இருந்தன. ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் ஆகிய அரிய செயல்களை அவர் செய்தார்.
தன் அறிவைப் பற்றியோ, தொண்டைப்பற்றியோ பிறரிடம் தற்பெருமையாக சொன்னதே இல்லை. “”நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யம் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன்,” என்று அனுமன் கூறினார்.
ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை. இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,”” உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்,” என்றார்.
“”நீ எப்படி கடலைத் தாண்டினாய்?” என ராமன் கேட்டார். அதற்கு அனுமன் மிகவும் அடக்கமாக, “எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால்” என்றார்.
தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் அனுமன் பணத்தையோ, பதவியையோ எதிர்பார்க்காதது மட்டுமின்றி தற்புகழ்ச்சியாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. “ரகுபதி ராகவ ராஜா ராம், பதீத பாவன சீதாராம்” என பாடி தனது மார்பை பிளந்து ராமரையும், சீதையையும் காட்டி தனது ராம பக்தியை வெளிப்படுத்தினவராயிற்றே அனுமன். மஹாபாரதத்தில், பீமனுக்கே தண்ணி காண்பித்தவராயிற்றே அனுமன். அவர் புகழ் என்றைக்கும் மேலோங்கி நிற்கும்.
எல்லா பக்தர்களும் மறக்காமல் சென்று வணங்கி ஆசி பெற வேண்டியது இந்த பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் எனக் கூறினால் மிகையாகாது.
கே.வி. வேணுகோபால்