கே.வி. வேணுகோபால்
சென்னை
சிறு கிராமங்கள் பலவற்றிலும் பிரமிக்கத்தக்க வகையில் வைணவ ஆலயங்கள் இருக்கிறது என்பதற்க்கு உதாரணமாக விளங்குகிறது சீர்காழி தாலுகாவில் கூத்தியம்பேட்டை என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் ஆலயம் எனக் கூறினால் மிகையாகாது. சோழர்கள் கால் கட்டடக்கலையில் இந்த கோயில் அமைந்திருப்பதால், சோழ அரசர்களுள் யாரேனும் ஒருவர் தான் இவ்வாலயத்தைக் கட்டியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பழமையான இந்தப் பரந்தாமன் திருத்தலத்துக்கு பல வைணப் பெரியோர்கள் வந்து தரிசனம் செய்திருப்பதாக பல செய்திகள் கூறுகின்றன. பல ஆண்டுகள் சேதமடைந்தும், மணல் மூடியும் காட்சியளித்த இந்த ஆலயம் பக்தர்களின் கடும் முயற்சியாலும், ஆர்வத்தாலும், ஒரு கட்டத்தில் ஒடு வேய்ந்த கட்டடத்திற்க்கு மாற்றப்பட்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இது கல் கட்டடமாகக் கட்டபட்டு குடமுழுக்கு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்குப் பார்த்த கோயிலுக்கு முன்னால் கொடிமடம் பலிபீடம் கருடன் சன்னதி பிரமாதமாக அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் சேனை முதல்வர், ராமானுஜர், மணவாளமுனிகள் தும்பிக்கை ஆழ்வார் சன்னதிகள் இருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் பெருந்தேவி தாயார் கருணையே உருவாகத் தனிச்சன்னதியில் திருக்காட்சியளிக்கிறார். வைணவ மரபின்படி தாயாரை சேவித்த பிறகே பெருமாளை வணங்கவேண்டும், அதாவது தாயாரே, பெருமாளிடம் பக்தர்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்வதாக ஐதிகம். தாயாரை மனதாரப் பணிந்து வேண்டிக் கொண்டு நகர்ந்தால், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளும் அர்த்த மண்டபத்தில் உள்ளன. கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாத்திக்கிறார். சங்கம், சக்கரம் தாங்கி, அபய வரதம் காட்டி நாற்கரத்துடன் சேவை சாதிக்கும் பெருமாளை தரிசிக்கும்போதே மனதுக்குள் நிம்மதி நிறைகிறது.
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு அன்றும், அட்சயதிருதியை அன்றும் சிறப்புத் திருமஞ்சனமும் ஆராதனையும் நடைபெரும். சித்திரை முதல் நால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் வரதர், இரவு திருவீதி உலா வருவார். அந்த சமயங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் தரிசனம் செய்வார்கள். வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் ஐந்து நாட்களும் சிறப்புத் திருமஞ்சனம் நடந்து விசேஷ அலங்காரத்தில் வர்தராஜப் பெருமாள் தரிசனம் தருவார். விசாக நட்சத்திரத்தன்று தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் இதனைக் காண கண்கோடி வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளிலும், வைகுண்ட ஏகாதசி அன்றும் ஆலயத்திற்கு ஏராளமான் பக்தர்கள் வருவார்கள். அன்றும் விசேஷேத் திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் கண்டு வரதர் எழிலாகக் காட்சி தருவார். வைகுண்ட ஏகாதசியன்று இரவு முழுக்க கோயில் நடை திறந்திருக்கும். அந்த சமயம் பஜனைகளும், ஆராதனைகளும் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கும்.
ஹஸ்த நட்சத்திரத்தன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் பால் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட துயரங்களும், தடைகளும் நீங்கி திருமணம் நல்லபடியாக நடைபெரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சனிக்கிழமைகளில் பக்தர்களின் சகல துன்பங்களும் நீங்கிட, இந்த அரிய ஆலயத்தில் சர்வ சங்கட நிவாரணப் பிரார்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பெருவாரியான பக்தர்கள் பலன் பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து பச்சை பட்டாடை அணிவித்து நன்றிக்கடனை செலுத்துகிறார்கள், பக்தர்கள். மனதில் இனம் புரியாத அச்சமும் அதனால் படபடப்புக்கு ஆளாபவர்கள் இக்கோவிலில் இருக்கும் அனுமனுக்குத் திருமஞ்சனம் செய்து, வெண்ணெய் சாத்தி வழிபட்டால், அச்சம் நீங்கி மனதில் அமைதி ஏற்படும் என்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், இவ்வாலயத்தில் இருக்கும் பெருந்தேவி தாயாருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து துளசி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்து பலன் பெருகிறார்கள்.
இக்கோயிலில் வழங்கப்படும் தீர்த்தம் உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்கழியிலிருந்து 15 கி.மீ தொலைவில் கூத்தியம்பேட்டை உள்ளது. பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். தரிசன நேரம் – காலை 7 – 10 முதல், மற்றும், மாலை 6 லிருந்து இரவு 8 மணி வரை. சனிகிழமைகளில் மட்டும், காலை, 7 முதல் பகல் 12 வரையும், மாலை, 6லிருந்து, இரவு 9 மணி வரைக்கும் திறந்திருக்கும். பிரசித்தி பெற்ற இந்த கோவில் பக்தர்களை அன்புடன் என்றென்றும் வரவேற்கிறது.
இந்த கோவில் நற்பணிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடையை கீழ்கண்ட முகவரியில் உள்ள திரு ஸ்ரீராமன் அவர்களுடன்
தொடர்பு கொண்டு அனுப்புமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது. இந்த கோவிலை அவர் திறம்பட நிர்வகிக்கிறார் எனக் கூறினால் மிகையாகாது.
ஸ்ரீ ராமன் மொபைல் எண்: 9840299274
ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்த சபா
பஞ்சாப் நேஷனல் வங்கி
அக்கவுண்ட் எண்: 2835000101760979
புத்தூர் கிளை
ஐப்எச்சி கோடு: பியூன்பிவோ 283500