25 வகையான ஏகாதசி மகிமை என்னென்ன? பின்வருமாறு பார்ப்போமா:-
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் .இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாகிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று காலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம்.
சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம்.
இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று “பாரணை ” என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.
25 ஏகாதசிகள் பின்வருமாறு:
1. சித்திரை வளர்பிறை ஏகாதசி காமதா ஏகாதசி
2. சித்திரை தேய்பிறை ஏகாதசி பாப மோசனிகா ஏகாதசி
3. வைகாசி வளர்பிறை ஏகாதசி மோகினி ஏகாதசி
4. வைகாசி தேய்பிறை ஏகாதசி வருதினி ஏகாதசி
5. ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி
6. ஆனி தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி
7. ஆடி வளர்பிறை ஏகாதசி விஷ்ணு சயன ஏகாதசி
8. ஆடி தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி
9. ஆவணி வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசி
10. ஆவணி தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி
11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி
12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி அஜ ஏகாதசி
13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி
14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி
15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி பிரபோதின ஏகாதசி
16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி
17. மார்கழி வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி
18. மார்கழி தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி
19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி
20. தை தேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி
21. மாசி வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி
22. மாசி தேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி
23. பங்குனி வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி.
24. பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி.
25. அதிக ஏகாதசி கமலா ஏகாதசி
ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி
கே.வி. வேணுகோபால்