28-12-22 புதன் அன்று ஸ்ரீரங்கத்தில் ஸங்கோஷ்டீ எனும் ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாய மாநாடு மிக வைபவமாக நடைபெற்றது. இதை நடத்திய Global Stotra Parayana Kainkaryam (GSPK) எனும் அமைப்பானது உலகளவில் ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாயத்தை பரப்பவும் வளர்க்கவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது; இதன் மூலம் பல சிறுவர்கள் வேதம், திவ்யபிரபந்தம், ஸ்தோத்ரபாடம், சம்ஸ்க்ருதம் முதலியதை online இல் படிக்கிறார்கள்; மேலும் இதில் காலக்ஷேபங்கள், உபன்யாசங்கள், திருநக்ஷத்ர கோஷ்டிகள் முதலியவற்றில் உலகளவில் பலரும் பங்குகொண்டு பயன் பெறுகின்றனர்.
இந்த அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக நடந்த இந்த இரண்டாவது ஸங்கோஷ்டீ மாநாட்டில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். ‘ஸ்ரீரங்க விஜயம்’ எனும் மையக் கருத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீதேசிகன் அன்று ஸ்ரீரங்கவிஜயம் செய்ததன் பலனாக ஸ்ரீரங்கத்துக்கே விஜயம் அமைந்ததை நமக்கு நினைவுறுத்தியது.
ஸ்ரீமத் அழகியசிங்கர் மற்றும் ஸ்ரீமத் பவுண்டரீகபுரம் ஆண்டவன் ஆசாரியர்களின் அநுக்ரஹ பாஷணத்துடன் ஆரம்பித்து, கருத்தரங்கம், உபன்யாசம், கேள்வி-பதில் முதலிய நிகழ்ச்சிகள் நன்கு நடைபெற்றன; சிறுவர்கள் பங்குபெற்ற ‘ஸ்ரீரங்கவிஜயம்’ நாடகம், நாட்டியம், வேத-ஸ்தோத்ர-பாராயணம் முதலியவை அதி-அற்புதமாக கண்ணிலேயே நீங்காமல் நிற்கின்றன.
நம் ஸம்ப்ரதாயத்தில் பல ஆண்டுகளாக அயராமல் பாராயணம் முதலிய பல கைங்கர்யங்கள் செய்துவரும் மூன்று ஸ்வாமிகளுக்கு விசேஷ கௌரவமும் சம்மானமும் சமர்ப்பிக்கப் பட்டது. அவர்கள் – ஸ்ரீ உவே காஞ்சீபுரம் பி. (கண்டா) வேங்கட வரத தாதாசார்ய ஸ்வாமி, புரிசை ராஜகோபாலாசாரிய ஸ்வாமி, பேரமல்லூர் ஸ்ரீநிவாசாசார்ய ஸ்வாமி ஆகியவர்; மேலும் பெரிய கோவில் அர்ச்சக ஸ்வாமிகளும், gspk ஆசார்யஸ்ரீ ஸ்வாமிகளும் கௌரவிக்கப் பட்டனர். ஸங்கோஷ்டீ சிறப்பு மலருடன் ‘ஸ்ரீரங்கவிஜயம்’, ‘திருமண்காப்பு’, ‘தீட்டு விவரம்’ முதலிய நூல்கள் வெளியிடப் பட்டன.
GSPK ஆசார்யஸ்ரீ ஸ்வாமிகளும், ஸேவாஸ்ரீ தொண்டர்களும், தாஸஸ்ரீ ஆர்வலர்களும் சேர்ந்து பலநாட்களாக அயராமல் உழைத்து ஏற்பாடு செய்திருந்தனர். மேன்மேலும் பன்மடங்கு வளர வேண்டும் என்ற ஸ்ரீமத் அழகியசிங்கர் அனுக்ரஹமே இதன் உபாயமும் பலனும் ஆகும்.