அருணாசல கவிராயர் இராம நாடக கீர்த்தனைகளில் அனைவராலும் அறியப்பட்ட பாடல்களில் ” கண்டேன் சீதையை” என்ற பாடலும் ஒன்று. அனுமன் சீதா பிராட்டியை கண்டு விட்ட சேதியை ஓடோடி வந்து ராமருக்கு தெரிவிக்கிறார். அனுமன் சொல்லின் செல்வர் அல்லவா. முதலில் பாசிடிவ்வான கண்டேன் என்ற சொல்லை சொல்லி பிறகு சீதையை என்று குறிப்பிடுகிறார். இந்த பாடலை ஆலத்தூர் பிரதர்ஸ் பாகேஸ்வரியில் பாடியுள்ளார்கள். வேறு யாரோ வசந்தா ராகத்தில் பாடி இருக்கிறார்கள்.
வசந்தா ராகம் மகிழ்ச்சியை தூண்டும் எடுப்பான ராகம். அனுமனின் உற்சாகம் ராகத்திலேயே கரைபுரண்டு ஒடுகிறது. ஆனால் பலருக்கு அந்த பாடலுக்கு பாகேஸ்வரி ராகம்தான் சரியாகப்படுகிறது எதனால் என நாம் கேட்கலாம். பாகேஸ்வரியில் மென்மையுடன் லேசான சோகமும் இருக்கும். அதாவது ரொம்ப நேரம் பார்க்காமல் திடீரென அம்மாவை பார்க்கும் குழந்தையின் அழுகை கலந்த ஆனந்தம். இந்த ராகம் அந்த உணர்ச்சியை பிரதிபலிக்கிறது. சொல்பவர்ம் கேட்பவர், இருவருக்குமே கண்ணிர் பெருகும் உணர்ச்சிமயமான தருணம் அது.
ஏன் காலம் சென்ற புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய “பிரிந்தவர் மீண்டும் சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி” என்ற பாட்டின் ராகத்தை கேட்டவுடன் மனம் நிறைவு பெருகிறது. இப்படி ராகங்களை மனதில் வைத்து தான் மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் ‘அபூர்வராகங்கள் படத்தை எடுத்தார். “ஏழுசுரங்களில் எத்தனை பாடல்” என திறம்பட பாடிய மறைந்த பத்மபூஷண் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராமை மறக்கத்தான் முடியுமா? அதே படத்தில், பிரபல பாடகர் ஜேசுதாஸ் பாடிய “அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்” என்ற பாடல் இசை விரும்பிகளின் மத்தியில் என்றென்றும் நினைவில் இருக்கும். இப்படி பல உதாரணங்களை கூறிக்கொண்டே போகலாம்.
கே.வி. வேணுகோபால்