Paramparaa – The Tradition Continues….

அக்ஷ்ய த்ருதியை அன்று நகைகள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது 

சுமார்  25 வருடங்களுக்கு முன்னால் அக்ஷ்ய த்ருதியை  என்று தங்கம், வைரம், நகை வாங்க படை எடுத்ததும் கிடையாது.தான தர்மம் என்று வாரி வழங்கியதும் கிடையாது.அது ஒரு சாதாரண நாளாகத்தான் கழிந்தது. ஆனால் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், தங்களின் விளம்பர முன்னேற்றங்களுக்காக அக்ஷயத்ருதியையில் தங்கம் வாங்கினால் மேன் மேலும் அக்ஷயமாக பெருகும் என்று அறிவிக்க ஆரம்பித்தார்களோ,அது முதல் கடைகளில் கூட்டம் பெருக்கெடுக்க தொடங்கியது. தயிர்சாதம், தண்ணீர், நீர் மோர் ,விசிறி ,பானகம் தானம் செய்தால் நல்லது என்று ஒரு சாரார் கூற, அதுவும் நடக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்ய இதுவும் ஒரு உந்துதல் தான். அக்ஷ்ய த்ருதியையன்று, சென்னையில் உள்ள டி நகரில் எள்ளு போட்டால்  எண்ணை விழாத கூட்டமாக இருக்கும். பெருவாரியான மக்களின் மனதில் அக்ஷயத்ருதியை அன்று ஏதாவது நகை வாங்கினால் தங்கள் செல்வம் பெருகும் என நினைக்கிறார்கள். அவர்களின் இந்த மூட நம்பிக்கைகளுக்கு உரம் போடுகிறார்கள் பல கடைகாரர்கள். இதில் வேதனை என்னவென்றால், வறுமையில் வாடும் பல குடும்பங்கள் கூட இந்த விளம்பரங்களுக்கு அடிமையாகிறார்கள். பலர் வட்டிக்கு கடன் வாங்கியாவது  அக்ஷ்ய த்ருதியை அன்று நகை வாங்க விரும்புகிறார்கள்.

துயரம் என்னவென்றால், பெருவாரியாக படித்த பெண்மணிகள் இதற்கு அடிமையாகிறார்கள். தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை சமயத்தில் நகைகள் வாங்கும் குடும்பங்கள் செழிப்பத்தில்லையா? அல்லது மற்ற சமயங்களில் நகைகள் வாங்கினால் கேடு விளைவிக்கப்படுமா? இது வியாபாரமாக்கப்படுவதை தடுப்பது நல்லது. அக்ஷ்ய த்ருதியை அன்று ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்வது சாலச்சிறந்தது. அல்லது வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு பரிமாறி, அன்பளிக்கலாம். ஏதாவது ஒருவகையில் அவர்களின் சுமையை குறைக்க நாம் உதவலாம். சிறுதுளி பெருவெள்ளம் எனக் கூறுவார்கள் முன்னோர்கள். அவர்களின் அரிய மற்றும் பண்புள்ள பணிகளை நாம் நினைவில் கொண்டால், நகைகள் அணிவதை விட ஆனந்தம் தரும் விஷயங்கள் பல இருக்கின்றன என்பதை நாம், குறிப்பாக பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எதையும் எதிர்பார்க்காமல் தான தர்மம் செய்தான், செல்வம் குறைவின்றி பெருகும் எனக் கூறப்படுகிறது. புண்ணியம் குறையின்றி பெருகும் எனவும் புராணத்தில் விளக்கப்படுகிறது. இன்றும் பலபேர்கள் இருக்க, கர்ணனை தானே நாம் கொடை வள்ளல் எனக் கூறுகிறோம். ஏனென்றால், தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் என்ற நியதியை மீறி, தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் யாசகம் வேண்டி வருபவர்களை புறக்கணிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் மாவீரன் கர்ணன். தன்னை ஏமாற்றியவர்களுக்கும் மனமார உதவினான். தவிர, நம்பிக்கை  துரோகத்தை அறவே வெறுத்தான் கர்ணன்.  “செஞ்சோறுக்கடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் பாண்டவர்களுக்கு எதிராகவும், துரியோதனனுக்கு சாதகமாகவும் இருந்தான். மார்பில் இருந்த நகைநட்டுக்களை எல்லாம் மற்றவர்களுக்கு திறந்த மனத்துடன் கொடுத்து திருப்தியடைந்தான்.

                                                                                                                கே.வி. வேணுகோபால்

                                                                                                                சென்னை,

                                                                                                               

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour