லக்ஷ்மி ஹயக்ரீவரின் “ஞானானந்த மயம் தேவம்” என்னும் ஸ்லோகத்தை தெரியாத பள்ளிக்கூட மாணவ மாணவிகள் மிக குறைவு. இந்த ஸ்லோகத்தை சொன்னால் படிப்பு வரும், நல்ல மதிப்பெண் வரும் என்று பலமான நம்பிக்கையுடன் சொல்லுவோம். ஆனால் லக்ஷ்மி ஹயக்ரீவ பெருமாளை பற்றியோ அவரது அவதாரத்தின் மகிமையை பற்றியோ தெரிந்தவர்கள் மிக குறைவு.
திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ அவதாரம் மிக விசேஷமான அவதாரம். ஸ்ரீமத் பாகவத புராணத்தில் படைப்பின் ஆரம்பம் முதல் முடிவு வரை விவரிக்கப்பட்டுள்ளது. அதில் படைப்பின் ஆரம்பத்தில் திருமாலின் நாபியில் இருந்து ஒரு தாமரை பூ தோன்றி அதன் உள்ளே ப்ரம்ஹாவை படைக்கிறான் திருமால். ப்ரம்ஹா தான் யார், தான் எங்கிருந்து வந்தோம், தம்மை படைத்தவன் யார் என்று அறிய வேண்டி தபஸ் செய்ய, திருமால் அவருக்கு காட்சி அளித்து, சிருஷ்டியை படைப்பதற்கு அவருக்கு சக்தியை கொடுத்து, படைப்பின் மூலமான நான்கு வேதங்களையும் கொடுத்து பின்னர் சிருஷ்டியை தொடங்க அனுமதி வழங்குகிறான்.
இப்படி இருக்க இதன் நடுவே பிரம்மனுக்கு தூக்கம் வந்து, கொட்டாவி விடும் நேரத்தில் தாமரை தண்டிலிருந்து இரு துளிகள் மது-கைடபன் என்று இரு அரக்கர்களாக உரு எடுத்து நான்கு வேதங்களையும் திருடி செல்கிறார்கள். வேதத்திலிருந்து படைக்கும் சக்தியை தாங்கள் பெற்று அதனால் மேலும் அரக்கர்களை படைக்க எண்ணுகிறார்கள். வேதங்கள் தொலைந்ததால் எங்கும் கன இருள் சூழ்ந்தது. வேதங்கள் இல்லாமல் படைக்கும் தொழில் இயலாததால் ப்ரம்ஹா திருமாலிடம் சென்று நடந்த சம்பவத்தை எடுத்து சொல்லி, வேதங்களை மீட்டுக்கொடுக்குமாறு வேண்டுகிறான்.
திருமால் திருவோண நக்ஷத்திரம் கூடிய ஆவணி மாத பௌர்ணமியில் வெள்ளை குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ அவதாரம் செய்கிறான். இந்த அவதாரம் எடுத்தவுடன் குதிரையின் முகத்திலிருந்து சாம வேதத்திலிருந்து உத்கீதம் என்ற நாதம் பிறந்து மது-கைடபனை நடு நடுங்க செய்கிறது. பின்னர் மது-கைடபனுடன் யுத்தம் செய்து அவர்களை யுத்தத்தில் வதம் செய்து வேதங்களை மீட்கிறான். இப்படி மது என்ற அரக்கனை கொன்றதால் மதுசூதன் என்னும் பெயரால் திருமால் அழைக்கப்படுகிறான்.
ப்ரம்ஹா படைக்கும் தொழிலை ஆரம்பிக்கும் முன்னமே இந்த அவதாரம் நடைபெற்றதால் இதுவே திருமாலின் மும்முதல் அவதாரம் ஆகும். ஞான உறைவிடமான வேதங்களை மீட்டதால் ஹயக்ரீவன் ஞானத்தின் அதிபதியாக வணங்கப்படுகிறான். இவனுடைய திருமேனி சிறிதும் மாசற்ற படிகமணி போல தூய வெண்மை நிறத்தோடு விளங்குகிறது. ஹயக்ரீவ பெருமாளுக்கு கொத்துக்கடலையை வேக வைத்து பின் தேங்காயுடன் வெல்லப்பாகு சேர்த்து கிடைக்கும் ஹயக்ரீவ பண்டி என்னும் பிரசாதத்தை நிவேதனம் செய்தால் பெருமாள் மனம் உகந்து ஏற்றுக்கொள்வான் என்பதை குருராஜர் என்னும் மாத்வ ஆச்சார்யர் சரித்திரத்திலிருந்து நாம் அறிகிறோம்.
இப்படி மிக உன்னதமான ஹயக்ரீவ பெருமாளை நாம்
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம் I
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரிவமுபாஸ்மஹே II
என்று போற்றி வழிபடுவோமாக .
-ஸ்ரீதர் சம்பத், அமெரிக்கா