Paramparaa – The Tradition Continues….

லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த கதை

லலிதா ஸஹஸ்ரநாமம் பிறந்த அருமையான கதையை பார்ப்போமா?அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல. பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார்.

ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகஸ்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகஸ்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சமநிலை பெற்றது.

மேற்கூறிய கதை பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க அகஸ்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகஸ்தியர் என்பதுதானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகஸ்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா ஸஹஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகஸ்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும்.

பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப் படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஸஹஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. ஹயக்ரீவர் என்ற மகரிஷி (விஷ்ணு அவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) அகஸ்திய மகரிஷிக்கு உபதேசம் செய்வதாக 182 1/2 சுலோகங்கள் அடங்கிய நூல் அமைக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியரும், அவரது மனைவி லோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (லோபாமுத்ரார்ச்சிதா – லோபாமுத்திரையால் அர்ச்சிக்கப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உண்டு). தேவியின் கட்டளைக்கிணங்க வாசினி முதலான வாக்தேவதைகளே பிரத்யட்சமாகி இந்த தெய்வீக ஸ்தோத்திரத்தைச் செய்ததாகவும் புராணக் குறிப்பு உண்டு. இந்த நூலுக்கு எழுதப் பட்டிருக்கும் உரைகளில் தலைசிறந்ததாக விளங்குவது பாஸ்கர ராயர் எழுதிய “சௌபாக்ய பாஸ்கரம்” என்ற உரை.

பாஸ்கர ராயர் 1690 –  1785 கால கட்டத்தில் மிகப் பெரிய தேவி உபாசகரும், தத்துவ ஞானியும், அறிஞரும் ஆக அறியப்பட்டார். இவர் மகாராஷ்டிரத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு தன் குருநாதரைத் தேடி வந்தடைந்தார். காவிரிக் கரையில் நீண்ட நாள் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த ஊர் பாஸ்கரராஜபுரம் என்று இன்றளவும் வழங்கப்படுகிறது.

ஸஹஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன் வைக்கப்படுகின்றன.  வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை.

பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்துள்ளது. அதற்க்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது. ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்:-

ஸ்ரீமாதாவின் அவதாரம்

கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)

பண்டாசுர வதம்

மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)

குண்டலினீ ரூபம்

பக்த அனுக்ரஹம்

நிர்க்குண உபாசனை

சகுண உபாசனை

பஞ்சப்ரஹ்ம ரூபம்

க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்

பீடங்களும், அங்க தேவதைகளும்

யோகினீ தியானம்

விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்

சிவசக்தி ஐக்கியம்

தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அக்னிகுண்டத்தில் அவதரித்தவள் லலிதா தேவி. நான்கு கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றை ஏந்தியவள். இந்தப் புராண விளக்கம் தியானத்திற்குரிய தத்துவக் குறியீடாக லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தொடக்கத்திலேயே வந்து விடுகிறது. சிதக்னிகுண்ட ஸம்பூதா அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவள், ராகஸ்வரூப பாசா’ட்யா ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவள், க்ரோதாகார அங்குசோ’ஜ்வலா  தீமையைப் பொசுக்கும் கோபவடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவள், மனோரூப இக்ஷு கோதண்டா  மனமாகிய கரும்புவில்லை உடையவள், பஞ்சதன்மாத்ர ஸாயகா ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன் மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவள்.

பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளும், பின் தனது அங்குசத்தால் அதனை வெட்டி எறிபவளும் அவளே. மனமாகிய வில்லில் ஐம்புலன்களாகிய மலர்க்கணைகளைப் பொருத்தி தேவி பிரபஞ்ச விளையாட்டு விளையாடுகிறாள்.தத்துவ அளவில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் தூய அத்வைத நிலையில் இருந்தே பாடப்பட்டது என்பது இந்த நாமங்களின் பெருங்கடலின் ஒரு துளியை அள்ளிப் பருகினாலே தெரிய வரும் விஷயம். நிர்த்வைதாத்வைதம் எனப்படும் இருமை நோக்கை நீக்குபவள், த்வைத-வர்ஜிதா – இயல்பாகவே இருமை நிலை இல்லாதவள், ஸாமரஸ்ய பராயணா சமரசத்தில் நிலைபெற்றவள் என்பனவும் அன்னையின் திருநாமங்களே. இந்த அடிப்படையான சமரச பாவத்துடனேயே ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை நாம் பாராயணம் செய்யவும், தியானம் செய்யவும் வேண்டும்.

அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும்  எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும். தத்துவங்களே அன்னையின் இருக்கைகளாகவும் (தத்வாஸனா), காற்சிலம்பின் மணிகளாகவும், கையில் ஏந்தி விளையாடும் பூக்களாகவும், மகா காளிக்கோலத்தில் அவள் அணியும் மண்டையோட்டு மாலைகளாகவும் ஆகிவிடுகின்றன.

லலிதா ஸஹஸ்ரநாமம் அளிக்கும் பரவச அனுபவம் பக்தர்களுக்கு புல்லரிக்கிறது. இந்த துதியைப் பொருள் உணர்ந்து படிக்கும்போதும், தியானிக்கும்போதும் தர்க்க மனத்தின் எல்லைகளுக்கு அப்பால் அது சுழன்றடித்துச் செல்கிறது. பக்தியுடன் இதைப் பாராயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதோவொரு நாமம் நம் மனதில் ரீங்கரித்து மொழியின் சாத்தியங்களை மீறி ஒரு ஆன்மிகப் பெருவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. தத்துவங்களின் பெருவெளியாக லலிதா ஸஹஸ்ரநாமம் இருக்கிறது. மூலப்ரக்ருதி என்னும் ஆதி இயற்கை வடிவானவள் மூலப்ரக்ருதி.

இந்த ஆதி இயற்கை வெளிப்பட்டும், வெளிப்படாமலும் உள்ளது. வ்யக்தாவ்யக்த ஸ்வரூபிணி. வெளிப்படும் பேரியற்கை எங்கும் வியாபித்தும் (வ்யாபினீ), பல்வேறு வடிவாகவும் (விவிதாகாரா) உள்ளது. இந்த ஆதி இயற்கையை யாராலும் முழுமையாக அறிந்து விட முடியாது. அதற்கு பிரக்ஞை என்னும் முழுமை அறிவு தேவைப்படுகிறது, அந்த அறிவு வடிவானவள்  ப்ரக்ஞான கனரூபிணீ. இது சாங்கிய தரிசனம். அந்த முழுமை அறிவு அனுபூதியில் கைகூடும்போது, அறிபவன், அறிவு, அறிபடுபொருள் அனைத்தும் ஒன்றாக ஆகிவிடுகிறது.

                                                                                                                       கே.வி. வேணுகோபால்

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour