ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, “ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம். “விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,” என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், இதெல்லாம் கட்டுக்கதை என்கிறார் வேதாந்த தேசிகர். “”கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,” என்கிறார். “ரங்கநாதரை கண்குளிர தரிசித்து விட்டபின், எப்படி உங்களால் போயிட்டு வரேன் என்று சொல்லி விட்டு கிளம்ப முடிகிறது. ரங்கனை சேவித்தால் அங்கேயே இருந்து விட வேண்டும்,” என்பதே ஆழ்வார்களின் முடிவு. “என்னை அவமானப்படுத்தியவன் விபீஷணன். அவனுக்காகவா சயனத்திருக்கிறீர்?” என்று கேட்கிறாள் பிராட்டி. பெருமாளும் வியப்புடன், “உம்மை யார் அவமானப்படுத்தியது?” என்றார். அவரைப் பார்த்து தாயார், “” வானுலகில் பிரம்மா, குபேரன், இந்திரன் போன்றவர்கள் எல்லாம் என் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், நான் யாரும் கூப்பிடாமலே இலங்கைக்குப் போனேன். ஆனால், விபீஷணனோ ராவணனிடம், “”ராம பாணம் இலங்கையில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரையும் அழித்துவிடும். சீதை இங்கு வந்ததிலிருந்து இங்கு ரத்த ஆறு ஓடுகிறது. நரி ஊளையிடுகிறது. கொள்ளிக்கட்டைகள் கீழே விழுகிறது. இவளுக்கும் மங்கலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப் பழித்தவன் அவன். அவனுக்காக தெற்கு நோக்கி சயனத்திருக்கிறீர்களே?” என்று வியப்புடன் கேட்டாள்.இந்த உரையாடலை வால்மீகி ராமாயணத்தில் காணலாம்.
“விபீஷணன் நல்லதுக்காக ஒன்றைச் சொல்வானே தவிர, தீமைக்காக எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொல்லி இருந்தாலும், அதுவும் நன்மை கருதித் தான்,” என்றார் பெருமாள். பிராட்டிக்கு பெருமாளின் பதிலைக் கேட்டு ஒரே ஆனந்தம். பிராட்டியின் நோக்கமும், விபீஷணன் மீது குறை சொல்வது அல்ல. வீடு கட்டும் பெரிய கொத்தனார் போல பிராட்டி இங்கு செயல்படுகிறாள். கட்டிடம் கட்டும்போது, கட்டுமானம் உறுதியாக இருக்கிறதா? என்று அவ்வப்போது அவர் சோதித்துப் பார்ப்பார். பக்தர்களுக்காக பெருமாளை அவள் சோதித்துப் பார்க்கிறாள். அவர்கள் பெருமாளிடம் நிலையாக சேர்ந்து விட்டார்களா என்று சோதிக்கிறாள். இதுவும் அவளுடைய புருஷகாரம் என்னும் கருணையே.பிராட்டி கருணையே உருவான கடலாக விளங்குகிறாள். நம் குற்றத்தை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. நம்மை பெருமாளோடு சேர்த்து வைப்பதே அவளுடைய லட்சியம். பிராட்டி என்னும் கருணைக் கடலில், நாம் இன்னும் பிராயாணம் செய்யவில்லை. இதோ கடல் என்று கரையில் நின்று பார்த்து ஆனந்திக்கிறோம். அவ்வளவு தான். அவளின் வைபவத்தைக் கண்டு பெருமாளே ஆனந்தப்படுகிறார். தயாசதகத்தில் வேதாந்ததேசிகர் பிராட்டியின் கருணையை வியந்து பாடியுள்ளார். “திருவேங்கடமுடையானுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம் என எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால், பிராட்டியின் தயையும், துணையும் அவருக்கு இல்லாவிட்டால் அத்தனையும் தோஷமாகி விடும். பிராட்டியின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கே ஏற்றம் உண்டானது. அதனால் தான் பிராட்டியை லட்சுமி, மாதா என்றெல்லாம் போற்றி வணங்குகிறோம்,” என்கிறார் தேசிகர். “ஸ்ரீ தாயார் திருவடிகளே சரணம் ” என தினமும் பலமுறை கூறி பக்தர்களாகிய நாமும் ஏன் அவளின் அருள் பெறக்கூடாது?
கே.வி. வேணுகோபால்.சென்னை