Paramparaa – The Tradition Continues….

சிரீவரமங்கை – அரியதிவ்யஸ்தலம்

நம்மாழ்வாரால் பாடப்பட்ட சிரீவரமங்கை என்னும் திவ்ய ஸ்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு.  திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.  பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோமச முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமஷேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகனைசேரி எனவும் மரங்கள் நிறைந்த வனமும், மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி நான்குநேரி எனவும் அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் நடுமையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று. வடமொழியினர் தோத்தாத்தரி என வழங்குவர். வைணவ பெரியவர்கள் தோத்தாத்திரி என்றே அழைப்பர். இதன் வரலாற்றை பின்வருமாறு பார்ப்போமா:-

சிந்து நாட்டரசன் வேட்டைக்கு சென்றபோது அவனை எட்டுக்கால் யானை ஒன்று விரட்ட, தனது படையை விட்டுப் பிரிந்து நெடுந்தொலைவு அலைந்து பசியால் மிக வாடினான். அந்நிலையில் தூரத்தே தெரிந்த குடிலொன்றுக்கு செல்ல, அங்கு யாருமில்லாமல் அறுசுவை உணவு மட்டும் இருப்பதை கண்டான். பசி பொறுக்காத மன்னன் அதை எடுத்து உண்டுவிட்டான். சற்று நேரம் கழித்து அக்குடிசைக்குரிய குசானன் என்னும் முனிவன் அங்கு வந்து தான் விஷ்ணுவின் பூஜைக்கு வைத்திருந்த உணவை உண்ட இம்மன்னனைக் கடுஞ்சினத்துடன் நோக்கி, “நீ உண்ட உணவு உனக்கு நஞ்சாகுக. நீ பருகிய நீர் கள்ளாகுக. காய்கறிகள் பசுமாமிசம் ஆகுக. நீ நாயாக மாறி அலைந்து திரிக”, என சபித்தான்.   முனிவனின் பக்தி மேன்மையினையும் தனது தவறினையும் உணர்ந்த மன்னன் சாப விமோசனம் வேண்டி நின்றான். அதற்கு அந்த முனிவன், “இவ்வுலகில் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும் என்றார்”. 

ஒரு நாள் விலங்குகளை வைத்து வேட்டையாடும் ஒருவன் அந்நாயைப் பிடித்து சில வேடிக்கைகளைக் காட்டி, பல நாடுகளுக்குச் சென்று வரும் நிலையில், ஒரு நாள் மரங்களடர்ந்த இச்சோலைக்கு வந்து (வானமாமலை) ஓய்வெடுத்து அங்கிருந்த தாமரைகுளத்தில் நீராடினான். உடன் வந்தோறும் நீராடினர். இதைக்கண்ட நாயும் அவ்விதமே செய்ய, நாயுருவம் மறைந்து அரசனாக நின்றான். இதைக்கண்டு அனைவரும் அதிசயத்து நிற்க, தனது பூர்வக் கதையை தெளிவுற விளக்கி தன்னை அழைத்து வந்தவனை தனது தந்தைக்கொப்பான் என்று கூறி, இத்தலத்து எம்பெருமானை வழிபட்டு பல நாள் தங்கியிருந்து அவ்வேடுவனோடு தனது நாட்டை அடைந்தான்.    

மூலவர் – தோத்தாத்திரிநாதன் (வானமாமலை)

உற்சவர் – தெய்வநாயகன்

தாயார் –   ஸ்ரீதேவி, பூமிதேவி

தீர்த்தம் –   சேற்றுத்தாமரை தீர்த்தம்

விமானம்-   நந்தவர்த்தன விமானம்

சிறப்புக்கள் பின்வருமாறு விளக்கப்படுகிறது:

ஸ்வயம் வியக்தஸ்தலம் என்ற அமைப்புப்படி இது தானாகத்  தோன்றிய ஸ்தலம். எம்பெருமானும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்த வண்ணமே சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.  இங்கு பெருமானுக்கு தினந்தோறும் தைலஅபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் சகல வியாதிகளும் தீரும்.  ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். வானமாமலை ஜீயர் சுவாமிகள் இங்கே தான் எழுந்தருளியுள்ளார்.

மணவாள மாமுனிகளால் நியமனம் செய்யப்பட்ட அஷ்ட திக்கஜங்களுள் இந்த ஜீயர் முதன்மையானவர். மணவாள மாமுனிகள் “வாரீர் பொன்னடிக்கால் ஜீயரே” என்று இவரை அழைக்க மணவாள மாமுனிகளின் பாதுகைகளாக விளங்குபவர் ஸ்ரீவானமாமலை ஜீயர் (விஷ்ணுவின் பாதுகைகள் நம்மாழ்வார், நம்மாழ்வாரின் பாதுகைகள் மணவாள மாமுனிகள், மணவாள மாமுனிகளின் பாதுகைகள் வானமாமலை ஜீயர்).  ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் மூல நட்சத்திரத்தன்று, மணவாள மாமுனிகள் அணிந்திருந்த தங்க மோதிரத்தை ஜீயர் சுவாமிகள் அணிந்து காட்சி கொடுப்பதுடன் ஸ்ரீபாத தீர்த்தமும் அருளுவார். 

நவதிருப்பதிகளில் ஆழ்வார் திருநகரி தவிர வேறெங்கும் நம்மாழ்வாருக்கு மங்கள விக்ரகம் இல்லை. இத்தலத்தில் உள்ள சடாரியில் நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரே வந்து ஆசிர்வதிப்பதற்குச் சமானமானதாகும். இக்கோயில் நிர்வாகம் வானமாமலை மடத்து ஜீயர் சுவாமிகளின் ஆதினத்தில் உள்ளது. அவர்களே பரம்பரை அறங்காவலராக இருந்து இத்திருக்கோவிலில் ஒன்றும் குறைவு வராமல் பூஜை, திருவிழாக்கள் நடத்திவருகிறார்கள். இக்கோயில் திருப்பணிகளும் அவர்களே செய்து திருக்கோயிலைப் பொலிவுடன் விளங்கும்படி செய்து வருகிறார்கள். இத்திருக்கோயிலின் முக்கியமான திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவம், சித்திரை பிரம்மோத்திஸவமும் ஆகும்.

ஸ்ரீநம்மாழ்வார் கூறிய மகத்தான திருவாய்மொழியை கீழ்கண்டவறு பார்ப்போமா?

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்  கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ? கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே? கடல் சூழ்ந்த உலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்.

படைக்கப்பட்ட கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும் நானே என்கிறாள். மஹாபலியிடத்தில் கடல் ஞானத்தை தவமிருந்து பெற்றுக் கொண்டவளும் நானே என்கிறாள். மஹாவரஹமாகி கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே என்கிறாள். பிரளயத்தில் கடல் ஞானத்தை உள்ளே வைதபோது நோக்கினவரும் நானே என்கிறாள். இப்பெண்பிள்ளை இங்ஙனம் பேசுகிற இப்பேச்சுக்கள் கடல் சூழ்ந்த மண்ணுலகுக்குத் தலைவனான பெருமான் வந்து ஆவேசித்ததனாலேதானே எனக் கூறினால் மிகையாகாது.

மற்றும் இவ்வுலகிலுள்ள உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன் என அருளிய நம்மாழ்வாரின் திருவாய்மொழியை நாள் தவறாமல் கூறும் பக்தர்களுக்கு மேன்மேலும் நன்மை பயப்பார் திருமால் எனக் கூறப்படுகிறது. “திருமால் பெருமைக்கு நிகரேது, உந்தன் திருவடி நிழலுக்கு நிகரேது, பெருமானே உந்தன் அவதாரம்,  நீ எடுக்கவேண்டியது கல்கி அவதாரம்” என தெள்ளத் தெளிவாக பாடிய மஹா விஷ்ணுவின் ப்ரம பக்தரும், சீடருமாகிய ஸ்ரீ நம்மாழ்வாரை என்றென்றும் பெருமாளின் பக்தர்கள் நினைவு கொள்வார்கள்.

மேற்கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலத்தினை பக்தர்களாகிய நாமும் தரிசித்து தோதாத்ரிநாதனின் அருளைப் பெற்றால் என்ன?

                                                                                      கே.வி. வேணுகோபால்