ஆஞ்ஜனேயர் – பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
கே.வி. வேணுகோபால்
ஸ்ரீ ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும் அதனால் தானோ என்னவோ, ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் ஆஞ்ஜனேயரின் பெருமைகளை பற்றி வானளாவ புகழ்கிறார்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனூமாத் ஸ்மரணாத்பவேத் ||
ஆஞ்ஜனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரகிக்கிறார் என்று இந்தச் சுலோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.
சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் ஒல்லியாக இருப்பான். பெரிய பலசாலி முட்டாளாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆச்ஜனேயர்.
இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு வினயம் இருக்காது;
பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜனேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப்போலவே வினயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுப் பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டை கூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்ஜனேயரோ ராமச்சந்திரமூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படித் தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்ஜனேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது.
அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்து கொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவ மயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்ஜனேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அனுபவிக்கிறார்.
பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை – இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காம நினைவும் இல்லாமல் ராமனுக்குச் சேவை செய்தே நிறைந்து விட்டார்.
அவரை நம் சீமையில் பொதுவாக ‘ஹனுமார்’ என்போம். கன்னடச்சீமையிலே அவரே ‘ஹனுமந்தையா’ சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்ஜனேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.
ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம்.’ராம் ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ஜனேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக் கொண்டு நின்று கேட்கிறார்.
இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது நாம் உயர உயரத் துள்ளிக் கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக்கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈச்வரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் திறைந்த நிறைவு. அதை நமக்கு ஆஞ்சனேயர் அனுக்கிரகம் பண்ண வேணும்.
அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதிலும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க் கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசித்தபோது ஆஞ்ஜனேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்றும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அனுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அனுக்கிரஹத்தைச் செய்வார்.
ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.
ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
கே.வி. வேணுகோபால்
சென்னை