Paramparaa – The Tradition Continues…

கண்ணன் சொன்ன கதை

மஹாபாரதத்தில் கண்ணன் அருளிய கதையை பின்வருமாறு பார்ப்போமா: –

எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன்.  அத்தை மகன்கள் அனைவரும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள்.   யுதிஷ்டிரன் மட்டும் புரிந்து கொண்டான். ஆனால் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இன்னும் மனதில் வஞ்சம் இருந்தது தெரிந்தது. பாஞ்சாலியும் அதற்கு ஏற்றார் போல் அவர்களை உசுப்பி விட்டுக்கொண்டிருந்தாள்.

அத்தை குந்தியின் நிலை என்னை விட மோசம்.  பிறகு ஒரு நாள் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது நேரமில்லை.  கடைசியாக ஒரு முறை நானே  துரியோதனனிடம் போய் பேசுகிறேன் என்று கூறி அந்த வேலையை மேற்கொண்டேன்.

அந்த அரண்மனையில் என்னை பற்றி, சில பேரைத்தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை. நிறைய புதியவர்கள் ராஜ்யம் ஆள வந்துவிட்டார்கள். ‘எல்லாம் இப்போது  துரியோதனன்   கையில் , த்ரிதராஷ்ட்ரனுக்கு அங்கு அவ்வளவாக மரியாதையில்லை’ என்று விதுரர் முன்னர்  ஒரு முறை என்னிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

பேச்சு அவ்வளவு சுவாரஸ்யமாக அமையவில்லை. கர்ணனும், துரியோதனனும் கையில் அரசு இருக்கும் மமதையில் ஏளனமாய்ப் பேசினார்கள். நான் பொறுமை காத்து கடைசியாக ஐந்து கிராமங்களை பாண்டவர்களுக்கு கொடுக்குமாறு கேட்டேன். மறுத்து விட்டார்கள். இனி ‘ஆண்டவன்’ விட்ட வழி என்று பீஷ்மர், துரோணர் ஆகியவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து வந்து  விட்டேன்.

விஷயத்தை என் மூலம் கேள்விப்பட்டு முதலில் பீமன் தான் கதையை தூக்கிக்கொண்டு கிளம்பினான். தர்மனிடம் கண்ணால் ஜாடை செய்து அவனை அடக்கஸ் சொன்னேன். முதலில் படையை திரட்ட வேண்டும். பாண்டவர்களுக்கு நல்லவர்கள் என்ற பெயர் மட்டுமே இருந்தது. அர்ஜுனன் வில் வித்தையில் சிறந்தவன் என்பதால் அவனுக்கு ரதம் என்பது முடிவாயிற்று. என்னால் இந்த வயதில் களத்தில் இறங்கி சண்டை போட முடியாது. அதனால் நானே ரதத்தை ஓட்டுவதாக ஒப்புக்கொண்டேன்.

சக்ர வியூகத்தில் பகைவரை சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்துவதில் கௌரவர்கள் வல்லவர்கள். அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டிற்கு மட்டும் கொஞ்சம் நேரம் செலவானது. அபிமன்யு நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான். போர்க்களத்தில் கௌரவர்களின்  வியூகத்தை கலைக்க  யாரும் பார்க்காத போது அவனே புகுந்து விடுவானோ என்று நினைத்தேன். அதைப்பற்றி உடனே  நான்  யாரிடமும் சொல்லவில்லை.

பதினெட்டு நாட்கள் நடந்த போரை பற்றி விவரிக்க எனக்கு இப்போது சக்தி இல்லை. போரில் வென்ற பாண்டவர்க்கு அரசை உரிமையாக்கி விட்டு நான் த்வாரகைக்கு சென்று விட்டேன். மனது சரியில்லை. இவ்வளவு பெயரை பலி கொடுத்துவிட்டு இந்த ராஜ்ஜியம் தேவையா என்று அடிக்கடி நானே யோசித்து பார்த்துக்கொள்வேன். இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை.

அடிக்கடி காட்டுக்குள் சென்று அங்கு நடப்பது இப்போது பிடித்திருந்தது. அர்ஜுனன் ஒருநாள் வந்திருந்தான். பரீக்ஷித்திடம் அரசை ஒப்படைத்து விட்டு,  மனைவிகளையும அழைத்துக்கொண்டு  கைலாயம் செல்லப்போவதாக சொன்னான். நானும் பாதி வழி வருவதாக சொன்னேன்.

வழியில் எங்களை திருடர்கள் தாக்கி எங்கள் உடைமைளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். அர்ஜுனனுக்கு ரொம்பவும் வயதாகிவிட்டது. கண் கலங்கினான். அவனால் திருடர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறி பிடித்தாற்போல் கத்தினான். அவன் நல்ல நேரம் முடிந்துவிட்டது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் யூகமாக அறிந்து கொண்டேன். சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தேன்.

அதன் பிறகு நான் காட்டுக்குள் சென்று நிறைய நேரம் செலவிட்டேன். எனக்கும் மிகவும் வயதாகி காது, மூக்கு எல்லாம் நீளமாக தெரிய ஆரம்பித்துவிட்டது. என்னோடு வந்த பலராமனும் இறந்து விட்டான். எனக்கு சோர்வாக இருந்தது. ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்த முயற்சிக்கும்போது, முனிவரின் சாபத்தினால் நூறு வருடங்களாக   என்னோடு இருக்க முடியாமல் அலையும் ராதையைப்பற்றிய நினைவு வந்தது. கவலையாக இருந்தது.

த்வாரகா கடலில் மூழ்குவது போலவும் அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. என் தேரோட்டியிடம் விஷயத்தை சொல்லி, உடனே அங்கு விரையுமாறு கூறி அனுப்பி வைத்தேன். விஷயம் தேரோட்டியின் மூலமாக கேள்விப்பட்டு அர்ஜுனன் வருவான் என்றே எனக்கு தோன்றியது.  என் மனைவிகளை பத்திரமான இடத்திற்கு அவன் கூட்டிக்கொண்டு சென்று விடுவான், அதனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

பிறகு நிறைய நேரம் காட்டில் த்யானத்தில் செலவிட்டேன். பசி மறந்து போனது. என் முன்னே  கலியுகம் வரப்போவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டு மறைந்தது. சில நாட்கள் இவ்வாறு கழிந்ததும் ஒரு நாள் எதிர்பாராதவிதமாக என் மேல் ஏதோ விழுந்தது. முதலில்  எறும்பு கடித்தது போல் இருந்தது. பிறகு வலி தாங்க முடியவில்லை. படுத்துக்கொண்டுவிட்டேன்.

எங்கிருந்தோ ஒரு வேடன் என்னிடம் ஓடி வந்து மன்னிப்பு கேட்டான். இந்த பூமிக்கு வந்த பிறகு விதிக்கு நானும் விலக்கல்ல என்று அறிந்து கொண்டேன். அர்ஜுனனுக்கு தகவல் சொல்லுமாறு அவனிடம் கூறி விட்டு கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று கண்ணை மூட முயற்சித்தேன்.

கொஞ்ச தூரத்தில் காட்டினுள் என் முன்னாள் காதலி ராதை தெரிந்தாள். ஒவ்வொரு மரத்தையும் நான் என நினைத்து தடவி பார்த்துக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தாள் .அவளை அருகே வருமாறு அழைத்தேன். என் குழல் கானத்தை கேட்க வேண்டும் என்றாள்.  முதலில் பூமியில் என் வேலைகள் எல்லாம் முடிந்தனவா என்று சரி பார்க்க வேண்டும் என்று ராதையிடம் சொன்னேன்.நான் வந்த பிறகு இப்பொழுது அதல்லாம் எதற்கு என்று கேட்டு என்னை செல்லமாக கடிந்து கொண்டாள்.

வெகு தூரத்தில் அர்ஜுனன் சின்னப்பிள்ளை போல் அழுகையோடு வந்து  கொண்டிருந்தான்.  எனக்கு அவனைப்பார்த்து பாவமாக இருந்தது.

ராதையின் பக்கம் பார்வையைத்திருப்பினேன். சிரித்தாள்.  காட்டினுள் எங்கும் என் குழல் கானத்தை ஒலிக்கச்செய்தேன்.  நாங்கள் இருவரும் பாடிக்கொண்டே பறவைகள் போல் பறந்து சென்றோம். உடல் லேசாகி விட்டது போல் உணர்ந்தேன்.

                                                                                                        சிவ சுப்ரமணியன்,

                                                                                                                                சென்னை

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour