கோவர்தன பூஜை பகவான் கிருஷ்ணர் நமக்கு கொடுத்த பொக்கிஷம்
கோவர்தன பூஜை என்பது என்ன. இது பொதுவாக வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடுவார்கள். தீபாவளி முடிந்து நான்காவது நாள் நடக்கும் இந்த பூஜையை பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரேதசம், பீஹார், போன்ற இடங்களில் கோலாகலமாக கொண்டாடுவார்கள். மாட்டு சாணியை மலை உயரத்திற்கு பூஜையில் வைத்து, பகவான் கிருஷ்ணர் கோவர்தன மலையை அனாயாசமாக தூக்கியதை பக்தர்களுக்கு ஞாபகப்படுத்துவார்கள். பிறகு மலர்கள், புஷ்பங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கிருக்ஷ்ணருக்கு சமர்பித்து விட்டு தாங்கள் உணவு உண்பார்கள்.
கோவர்தன பூஜையை, ‘பத்வா’, மற்றும், ‘வர்ஷப்ரதிபாதா’ என்றும் அழைக்கிறார்கள். இது மதுராவுக்கு பக்கத்தில் உள்ள பிராஜ் என்ற இடத்தில் இருக்கிறது. இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். முதலில் கோகுலத்து மக்கள் இந்திர பகவானையே மழைக்காக வேண்டினார்கள். ஆனால் பகவான் கண்ணனோ, கோவர்தன மலையே வருண பகவானை வரவழைப்பதால், அவரையே வேண்டும் படி தனது பக்தர்களுக்கு அறிவித்தார். இதனால் கடும் கோபம் அடைந்த இந்திர பகவான் கடும் மழை, அதாவது ப்ரளயத்தை வரவழைத்து மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தினார் என புராணக் கதைகள் கூறுகிறது. பிறகு கண்ணன் கோவர்தன மலையை தாங்கி மக்களை காப்பாற்றுகிறார். இந்திரரும் தன் தவறை உணர்ந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்கிறார்.