தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்கு கிடைத்த விருது. இந்த இரண்டையும் இணைத்துத்தான் மதிப்புக்குரிய பாதூர் புராணம் ரங்கராஜன் என பக்தர்களாலும், அவரை விரும்புவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தாய் மொழியான தமிழிலும், மற்றும் சமஸ்கிரதத்திலும் வல்லமை பெற்றவர். இரு மொழிகளிலும் வேத நூல்களை திறம்பட கற்றவர்.
திருமலையில் நடைபெற்ற ஸ்ரீநிவாஸ கல்யாணங்களுக்கு வெகு சிறப்பாக வர்ணனைகள் வழங்கி பக்தர்களை மகிழ்வித்தார் எனக் கூறினால் மிகையாகாது. உபய வேதாந்தி என அறிஞர்களால் அழைக்கப்பட்ட பாதூர் புராணம் ரங்கராஜன் அவர்கள், 1944 ஆம் வருடம் கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். ஸ்ரீமத் அழகியசிங்கரிடம் இவர் ஸ்மாஸ்ரயணம் செய்து கொண்டார். தவிர, ஸ்ரீமத் வில்லிவளம் ஸ்ரீ நாராயண யதீந்த்ர மகாதேசிகனிடம் பரசமர்ப்பணம் செய்து கொண்டார்.
ஸரளகவி, சாக்க்ஷ பதாஞ்சலி ஆகிய சிறந்த விருதுகளை பெற்ற இவரது தந்தையார் ஸ்ரீமான் ராகவாச்சாரியாருடன் காலட்சேபம் செய்தவர். தான் உபன்யாசம் செய்ய தனது தாயார் பெருந்தேவி பெருமளவு உதவி செய்ததை அவர் என்றுமே நினைவு கூறத் தவறவில்லை. நாலாயிர திவ்விய பிரபந்தத்தை திருப்பதி உ.வே. கம்பராஜபுரம் சேஷாத்திரி ஐயங்காரிடம் கற்ற இவர் தனது வாழ்நாளில் சுமார் பதினேழாயிரம் உபன்யாசங்களை செய்தார். தனது சிம்மக்குரலால் பெருவாரியான பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலங்கள் குறித்த அறிமுகம், திருமண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஓன்றாக செம்மையாக கூறுவது போன்றவற்றில் ரங்கராஜன் அவர்கள் பெரும் திறன் பெற்றிருந்தார்.
ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் வர்ணணையாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி, பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்தார். தவிர, வேறு பல தமிழ் தொலைக்காட்சிகளிலும், பெருமாள் குறித்த உற்சவங்களை பக்தர்கள் மகிழும்படி செய்துள்ளார். சாஸ்த்திரத்தின் வழிமுமறைகளின்படி வாழ்ந்து மறைந்த ரங்கராஜன் அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மூலம், பெருமாளின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பினார். உதாரணத்திற்க்கு அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணைந்து சுமார் ஒரு மணி நேரம், தொலைபேசியில் உபன்யாசத்தை அருவி போல் பொழிந்து தள்ளினார். அவரின் இந்த அரிய நிகழ்ச்சி, அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலம் மாத்திரம் அல்லாமல், வாஷிங்கடன், கலிபோர்னியா போன்ற மாகாணங்களிலும் ஒலிபரப்பாகி அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது.
தவிர மார்கழி மாதங்களில் திருப்பாவையை நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து கூறி வந்தார். தவிர, பல நாட்கள், ஒரு நாளைக்கு, மூன்று முறை செய்து அசத்தியிருக்கிறார். இவரது, வேதங்கள், உபன்யாசங்கள், சொற்பொழிவுகள் போன்றவை மூவாயிரப்படி, ஆறாயிரப்படி திருப்பாவை ஜீயர் எனப்படும் உடையவர் ராமானுஜர் அவர்களின் வியாக்கியானங்களை உள்ளடக்கி அமைந்திருக்கும். திருப்பதி ராஷ்டிரிய வித்யாபீடம் இவருக்கு மகாமகோபாத்யாயம், மற்றும், திருப்பதி திருமலை தேவஸ்தானம் சாஸ்த்ரீய வித்யாமணி என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தன. தவிர, காஞ்சி காமகோடி பீடம், ஆன்மீக சேவா ரத்தினம் என்ற விருதை அளித்து கௌரவித்தது. இவரின் மற்றொரு சிறப்பு அம்சம், அஹோபிலம் மடம் ஆஸ்தான வித்வானாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தனின் பக்தராக இருந்ததால் அனைவரையும் தன் அன்பால் அரவணைத்துக் கொண்டு, பக்தர்களின் கேள்விகளுக்கு, செம்மனே பதிலளித்துள்ளார். ரங்கராஜன் ஸ்வாமி அவர்கள் பெருமாள் கைங்கர்யம் செய்ய வாழ்நாள் முழுவதும் அவருக்கு உதவியாக இருந்து திறம்பட பணி செய்த பெருமை அவரது திருமதி கல்யாணியையே சாரும். இந்த பெருமைக்குறிய தம்பதிக்கு மூன்று மகன்கள் உண்டு. இவரது நினைவாக திருப்பதி தேவஸ்தானம் தொலைக்காட்சியில், ஸ்ரீநிவாச கல்யாணம் நேரடி நிகழ்ச்சியில், திருக்கல்யாண உற்சவ நேரடி வர்ணனையை, தமிழ், தெலுங்கு, மற்றம் கன்னட தொலைக்காட்சியில் ஒரு முறை நிறுத்தி வைக்கப்பட்டது. பாதூர் புராணம் ரங்கராஜன் ஸ்வாமி அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பதில் அவர் பக்தர்களாகிய நம் எல்லோருக்கும் வருத்தம் தான். ஆனாலும், திருப்பதி தேவஸ்தானம், தனக்கே உரித்தான சிம்மக்குரலில் அவர் நமக்கு அருளிய உபன்யாசங்களை நாம் என்றும் கேட்கும் வகையில் திருப்பாவை குறுந்தகட்டினை வெளியுட்டுள்ளது. அவர் உடல் மறைந்தாலும், நம் எல்லோர் மனதிலும் என்றும் குடியிருந்து, வழிகாட்டியாக திகழ்வார். துணிவு, தெளிவு, நேர்மை, திறமை, அயராத உழைப்பு, இதற்கு பேர் போன அவரை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு நாம் அவர் வழியில் செயல்பட்டு, அவரின் பெருமைகள என்றென்றும் நிலை நாட்டுவோம்
ஜெயந்தி வேணுகோபால், சென்னை