Paramparaa – The Tradition Continues…

தீப ஓளி பிரகாசத்துடன் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் கார்த்திகை திருநாள் 

 கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவது ஏன் விசேஷமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் மகத்துவம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞானரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழிவகுக்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது எனக் கருதப்படுகிறது.

ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தை நாம் புரிந்துகொள்வதில் நம் பார்வை பெரும் பங்கை வகிக்கிறது. வெளிச்சம் இல்லாவிட்டால், நம்மை சுற்றி இருக்கும் எதையும் நம்மால் உணர முடியாது. இதன் அடிப்படையில் நமக்கு ஒளி முக்கியம். ஆனால் கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் வெறும் வெளிச்சம், அல்லது விளக்கு ஏற்றுவதைப் பற்றி மட்டும் அல்ல.முன்னோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் இது சம்பந்தமாக என்பதை பின்வருமாறு பார்ப்போமா: –

கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு நாளும்,  உங்களுக்கென்று ஒன்று, உங்களுக்கு நெருக்கமானவருக்கு ஒன்று, உங்களுக்கு சிறிதும் பிடிக்காதவருக்கு ஒன்று, என்று குறைந்தது மூன்று விளக்கேனும் தினமும் எல்லோர் வீட்டிலும் ஏற்றுவது நன்மை பயக்கும். ஒரு வருடத்தில் இரு பாகத்தை, தக்ஷிணாயனம், அல்லது சாதனா பாதை என அழைக்கப்படுகிறது.  இதில் இந்த கார்த்திகை மாதத்தில் தான் நாம் ‘கைவல்ய பாதைக்குள்’ மெதுவாக அடி எடுத்து வைக்கும் நேரம்.  தக்ஷிணாயனம் என்பது தீவிரமாக யோக சாதனாவில் ஈடுபட்டு, நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான நேரம். உத்தராயணமோ ஞானோதயம் பெறுவதற்கான நேரம்.  கார்த்திகையின் மகத்துவத்தை கீழ்கண்டவாறு வரும் கதையின் மூலமாக பார்ப்போம்: –

பிதாமகர் பீஷ்மர், சாதனா பாதையில் இறக்க விரும்பாமல், அம்புப் படுக்கையில் காத்திருந்து, உத்தராயண’த்தில் உயிர் நீத்தது நாம் அனைவரும் அறிந்த கதைதான். அவர் உத்தராயணத்தில் கைவல்ய பாதையில் இறக்க விரும்பியதற்கான காரணம், அந்த நேரத்தில் தான் வாழ்க்கையின் பலன்களை அறுவடை செய்ய முடியும். நம் உள்நிலையில் அறுவடை செய்ய வேண்டியவற்றை கைவல்ய பாதையில் மிக எளிதாக அறுவடை செய்துவிடலாம். இந்த கார்த்திகை மாதம், சாதனா பாதையில் இருந்து கைவல்ய பாதைக்கு மெதுவாக மாறும் நேரம். இந்நேரத்தில் விளக்குகள், அதில் இருந்து வெளிவரும் ஒளி, ஞானோதயம், விழிப்புணர்வு, முக்திக்கான அடையாளக் குறியீடுகள். இதை அறிந்து தான் வீட்டிலே பல விளக்குகள் ஏற்றி வைக்கிறோம்.

இது ஏதோ ஒரே ஒரு விளக்கை ஏற்றுவதைப் பற்றி அல்ல. நம் கலாச்சாரத்தில் பொதுவாக கார்த்திகை மாதத்தில், எப்போதும் ஏற்றுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது என்பதால்.

நம் கலாச்சாரத்தில் விளக்கு ஏற்றினால், கடவுளை வணங்குவதுபோல, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உள்ளது. கார்த்திகை தீபத்தின்போது வீட்டில் நூற்றுக்கணக்கில் தீபங்கள்ஏற்றிக் கொண்டாடுகிறோம். பூஜைஅறையில் பகல் வேளையிலும் விளக்கு ஏற்றிவைக்கிறோம். அங்கங்கே பெண்கள் ஒன்று சேர்ந்து விளக்கு பூஜையும் செய்கிறார்கள். எதற்காக விளக்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என நீங்கள் கேள்வி எழுப்பலாம். இதற்கான விடையும் பக்தர்களுக்கு விளக்கமாக அளிக்கப்படுகிறது.

நமது கலாச்சாரத்தில் விளக்கு என்பது மிக முக்கியமானதாக வணங்கப்பட்டு வந்திருக்கிறது. விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட சொல்லப் பட்டிருக்கிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இப்பொருட்களை உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தமாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், தீபத்தின் இந்தஒளிவட்டம், அது இருக்கும் விதத்திலேயே, வணக்கத்திற்கு உரியதாக இருக்கிறது.

நம் கண்ணுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த ஒளிவட்டம் உதவுகிறது. நம்மைப் பாதுகாக்கும் தன்மை எதுவாக இருந்தாலும் அதை வணங்குவது நம் பண்பாடு. எனவேதான், பூஜையறையில், கடவுளை வணங்கும்போது தீபத்தையும் ஏற்றி வணங்குகிறோம். விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் இருப்பதால் தான், மனிதர்கள் சேர்ந்து புழங்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, தொழில் நடக்கும் இடமாக இருந்தாலும் சரி, அவ்விடத்தில் நாளெல்லாம் விளக்கு ஏற்றி, அதை ஒளிரவிடும் பழக்கம் இருக்கிறது. இவ்விடங்கள் தான் என்றில்லாமல், நாம் படுக்கும் இடம், குழந்தைகள் படிக்கும் இடம், மற்றும் பொதுவாக நாம் அதிக நேரம் இருக்கும் இடங்களில் விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நன்மை பயக்கும். இது நம் மனநிலைக்கும்,  நம் ஆரோக்கியத்திற்கும், மற்றும் நம் சூட்சும உடலிற்கும் நன்மை பயக்கும்.  கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படும் திருநாளில், விளக்கேற்றுவதன் மகிமையையும் அதை வழிபடும்  வேளையில் திருமகள் இல்லத்தில் உறைந்திருப்பதாக ஐதீகம். பெண்கள் தலைவாரி, அழகாக உடை உடுத்திக் கொண்டு விளக்கேற்ற வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

திருவிளக்கில்,  சரஸ்வதி, லட்சுமி, துர்கா, ஆகிய தெய்வ சக்திகள் உள்ளதாக கருதப்படுவதால், தீப ஒளி, தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றார். நம் எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என இதிகாசத்தில் கூறப்படுகிறது. வீட்டை தூய்மை படுத்தி விளக்கேற்ற அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.  அகல் விளக்கு தீபம் திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் ஊற்றும்போது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிற எனவும் கூறப்படுகிறது.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு நாம் செய்யும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக வீட்டின் வெளியிலும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என புராணக்கதைகளில் விளக்கியிருக்கிறார்கள். தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும், மற்றும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைப் பயக்கும்,  பெரும் புண்ணியம் உண்டாகும், மற்றும் முன்வினைப் பாவம் விலகும் எனவும் கூறப்படுகிறது. மாலையில், 4.30-6.00 க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அதோடு வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். தீபம் ஏற்றிய பின்னர் ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம். தவிர, மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஏற்றினால் பீடை விலகும். வெள்ளி விளக்கு ஏற்றினால் திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு ஏற்ற தேவதை வசியம் உண்டாகும். வெண்கல விளக்கு ஏற்ற ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு ஏற்ற சனி கிரக தோஷம் விலகும் என பலவாறாகக் கூறப்படுகிறது.

எண்ணெய் நெய் கொண்டு தீபம் ஏற்றினால் செல்வ விருத்தி, மற்றும் நினைத்தது கைகூடும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும். தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றினால் வசீகரம் கூடும். இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்ற சகல காரிய வெற்றி கிடைக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்ற புகழ் அதிகரிக்கும். பாவம் அதிகரிக்கும் கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்ற கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே அதிகரிக்கும்.

சிலர் விளக்கு ஏற்றியதுடன் நமது கடமை முடிந்தது என்று நினைக்கின்றனர். விளக்கு ஏற்றி, பிறகு அணைக்க மறந்து விட்டால் அது தானாக கருகி அணைந்து விடும். அது தானாக அணையக்கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. மற்றும் கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது அரிசியால் குளிர்விக்க வேண்டும் அப்போதுதான் விளக்கு ஏற்றியதன் பலன் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இரண்டாவது ஆண்டு தொடர்ச்சியாக கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெருகிறது. கிரிவலம் செல்லவும் தீப மலையேறவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இந்த மாதம்(நவம்பர்) 19 ஆம் தேதி, அதிகாலை அண்ணாமலையார் கருவறையில் 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளோடு தான் இறைவன் அருளியுள்ளார். அப்படி கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த நாளாகத் திகழ்கின்றது. கார்த்திகை மாதம் முதல் தேதியில் மாலை அணிவித்து, ஐயப்பனை வழிபடக்கூடிய மாதம் துவங்குகின்றது. ஒவ்வொரு மாதத்திற்கும் பல சிறப்புகள் உண்டு என்பதைப் போல கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி அதாவது ஏகாதசிக்கு அடுத்து வரும் தினத்தில் நாம் ஒருவருக்கு அன்னதானம் செய்தால், கங்கை கரையில் 1000 பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இது குரு பார்வையின் கோடி புண்ணியத்துக்கு சமம் எனக் கருதப்படுகிறது.

தீபம் இல்லாமல் கார்த்திகையை கொண்டாடினால், பருப்பு இல்லாமல் திருமணம் செய்வதற்க்கு சமமாகும். கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வீட்டிலும், வெளியிலும்  தவறாமல்,அகல் விளக்கு ஏற்றவேண்டும். கூறிப்பாக, திருக்கார்த்திகை தீபம் மிகவும் விஷேசமானது. தவிர, கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்று கிழமைகள் மிக சிறப்பானது. இது கணவன் மனைவி ஒற்றுமையை மேம்படுத்தும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவதற்கான அற்புதமான விரத நாள் எனவும் கூறப்படுகிறது. திருவாரூரில் ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் திருமால், மகாலட்சுமியை அடைய தவம் வழிபட்ட தலம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர நினைப்பவர்கள் ஞாயிறு அன்று விரதம் இருந்து மாலை வாஞ்சிநாதசுவாமி கோயில் சென்று வழிபட்டு வரலாம்.அவ்வளவு தூரம் செல்ல முடியாது என நினைப்பவர்கள், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வருவது நல்லது.

கார்த்திகை என்றால் நினைவுக்கு வருவது சோமவாரம், அதாவது திங்கட் கிழமை. சந்திரன் சிவபெருமானை வணங்கி நலம் பெற்ற திருநாள் இது. அதனால் இந்த சோமவாரத்தில் சிவ பெருமான் சந்திர மெளலீஸ்வரராக எழுந்தருளி அருள் செய்வார். இந்த தினத்தில் வலம்புரிச் சங்கினால் செய்யப்படும் சங்காபிசேகம் செய்யப்படும். பக்தர்களும், கார்த்திகை திங்கட்கிழமையில் தண்ணீரும், பன்னீரும் கலந்து, பூக்களின் இதழ்களை சேர்த்து, ஒரு ரூபாய் நாணயம் சேர்த்து, தனக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி தங்கள் வீட்டில் இருக்கும் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். வீட்டில் செய்ய முடியவில்லை என்றால், கோயிலுக்கு சென்று இந்த அபிஷேகத்தை தரிசனம் செய்து வரலாம். மற்றும், கார்த்திகை மாதத்தில் நடக்கும் பஜனை மிகவும் பிரசித்தி பெற்றது.

சென்னைக்கு அருகில் இருக்கும் சோளிங்கர் எனும் அற்புத திருத்தலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர் கண்களைத் திறந்து ஆசி வழங்கும் மாதமாக இந்த கார்த்திகை திருநாள் விளங்குகின்றது. மகா விஷ்ணு துளசியை கார்த்திகை மாதம், வளர்பிறை துவாதசியில் மணந்து கொண்டதால், இந்த மாதத்தில், வீட்டில் சாலகிராமம்  வைத்திருப்பவர்கள், அதை  சுத்தமான நீரால் அபிஷேகம் செய்து, பின்னர் துளசியால் அர்ச்சனை செய்தால், அவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஆக பக்தர்களே, பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என கூறுவது போல், ஒவ்வொரு வருடமும், எல்லோரும் மறக்காமல் கொண்டாட வேண்டிய அரிய பண்டிகை தெள்ளத் தெள்ள திகட்டாத  தீப ஓளி வீசும் மகத்தான கார்த்திகை திருநாள் எனக் கூறினால் மிகையாகாது.    

                                                                                              கே.வி. வேணுகோபால்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

Learn Stotras, Divya Prabandham, Sanskrit and Nithya Karma

EVENTS

Local   Temple   NRI   Pontiffs’ Tour